நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் என்கவுண்டர் ஆபிஸராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.
வேட்டையன் படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ஜெய்பீம் படத்தை தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கிய படம் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்தது.
அதேபோல் வேட்டையன் படத்தில் பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி, அபிராமி, கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தது இந்த படத்திற்கு பக்கபலமாக இருந்தது. என்கவுண்டர் பிரச்சனையையும், கல்வி வியாபாரத்தையும் கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு நிறைவு செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு வேட்டையன் படம் ஒரு அபரிமிதமான லாபம் தந்த படமாக அமைந்தது. இதுவரை வேட்டையன் படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிப்பதாகவும், அந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆன நிலையில், அதைத் தொடர்ந்து புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. தீபாவளிக்கு அமரன், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியான நிலையில், 20 நாட்களுக்கு மேலான நிலையில், வேட்டையன் படம் ஓடும் தியேட்டர்களில் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
இதையடுத்து வேட்டையன் படம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதே போல் வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு சாட்டிலைட் சேனலில் வேட்டையன் வெளியாகிறது. சன் டிவியில் வேட்டையன் படம் பண்டிகை சிறப்பு படமாக திரையிடப்பட அதிக வாய்ப்புள்ளது.





