தமிழ் சினிமாவில் எப்போதேனும் குறிஞ்சி மலர் போல சில சிறந்த படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வந்து விடுகின்றன. அதுபோல் வந்த படங்களில் காக்கா முட்டை, சித்தா, பண்ணையாரும் பத்மினியும், குட்நைட், மகாராஜா, பார்க்கிங் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம் சமீபத்தில் அந்த வரிசையில் வெளியான படம் லப்பர் பந்து.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். ரூ. 5 கோடியில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், கெத்து தினேஷ் கேரக்டர்கள் வேற லெவலில் இருந்தது, படத்தை பெரிய அளவில் பேச வைத்தது.
தீபாவளி பண்டிகை தினமான நேற்று இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படம் ஓடிடியிலும் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த தி கோட் படம்தான் ஓடிடியில் ரிலீசான பிறகும், தியேட்டர்களில் ஓடியது. அதேபோல் இப்போது லப்பர் பந்து படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன நிலையிலும், தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அபிமான நடிகர் என்பது மட்டுமின்றி, படம் தரமானதாக இருந்தால் ரசிகர்களின் வரவேற்பு அபரிமிதமாக இருக்கும் என்பதே இது பிரதிபலிக்கிறது.
லப்பர் படம் தந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அடுத்து இயக்கப் போகும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் ஏற்கனவே இட்லி கடை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து, படத்தை டைரக்டர் செய்கிறார்.
அதனால் தனுஷ் மீண்டும் தங்களது நிறுவன தயாரிப்பில் நடிக்க ஆகாஷ் பாஸ்கரன் முடிவு செய்த நிலையில், தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிப்பது என்று முடிவாகியுள்ளது. நடிகர் தனுஷ் இப்போது நடிகராக, இயக்குனராக அசத்தி வருகிறார். ராயன் படத்தை அவரே இயக்கி நடித்தது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மாஸ் ஹிட் படம் தந்த லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துடன் தனுஷ் இணைவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை, எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.





