நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக, அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தார். சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம் போன்ற படங்களில் அவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு விஷால் படங்கள் என்றாலே, தியேட்டரை விட்டு வெளியே தெறித்து ஓடும்படியான படங்களாக அவருக்கு அமைந்தன. அதுவும் கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் நடிகர் விஷாலுக்கு அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக துப்பறிவாளன் அமைந்தது. மிஷ்கின் இந்த படத்தை மிகச்சிறப்பாக இயக்கி இருந்தார். டிடெக்டிவ் கணியன்பூங்குன்றன் என்ற கேரக்டரில், விஷாலை வாழ வைத்திருந்தார். ஆனால் துப்பறிவாளன் 2 படம் எடுக்கும்போது ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக அவரது செயல்பாடுகள், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், பொறுப்பற்ற தன்மை பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக பொது இடங்களில் அவர் சாப்பிடும் போது செய்யும் சேட்டை, சமீபத்தில் கூட யோகிபாபு அதற்கு காட்டிய ரியாக்சன் பயங்கர வைரலானது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது விஷாலுக்கு கம்பேக் கொடுத்தது. ஆனால் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான். அவர் மட்டும் நடிக்கவில்லை என்றால், விஷாலின் தோல்வி படங்கள் பட்டியலில் இதுவும் சேர்ந்திருக்கும்.
விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் துப்பறிவாளன் 2 படம் நின்று போனதால், அந்த படத்தை நானே இயக்கி, நடிக்கிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்பே சவால் விட்டிருந்தார் விஷால். இப்போது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை துவங்கவும், அதற்கான லொக்கேஷன் பார்க்கவும் இப்போது லண்டனுக்கு சென்றிருக்கிறார் நடிகர் விஷால். மிஷ்கினை இயக்கிய படத்தை, அவரே இல்லாமல் 2ம் பாகத்தை எடுத்து பழிவாங்கவும், சவாலில் ஜெயிக்கவும் லண்டன் சென்ற விஷால் ஜெயிப்பாரா, அல்லது இதுவும் வெறும் பில்டப் தானா என்று விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.





