நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளானவர்தான் சூர்யா. ஸ்கூல் பையன் மாதிரி தெரியறார், கேமரா முன்பு எப்படி நிற்பது என்றுகூட தெரியாதவராக இருக்கிறார் என்றெல்லாம் அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் அமீர் இயக்கத்தில் அவர் நடித்த மௌனம் பேசியதே படம், அவரை ஒரு நல்ல நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா படம் அவரை ஒரு ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. இயக்குனர் அமீரும், இயக்குனர் பாலாவும் அவரை ஒரு திரைக்கலைஞனாக உருவாக்கி தந்தனர்.
தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படமும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படமும், சூர்யாவை ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக்கியது. பிறகு வெளியான இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் படமும், கேவி ஆனந்த் இயக்கிய அயன் படமும் அடுத்தடுத்த உயரங்களுக்கு சூர்யாவை கொண்டு சென்றது.
வரும் 14ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த வரலாற்று படமான கங்குவா வெளியாகிறது. பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகும் இந்த படம் நிச்சயமாக சூர்யாவுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இப்போது இந்தியில் கர்ணன் என்ற படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கிய இந்த படம் பெரிய தோல்வியை சூர்யாவுக்கு தந்தது. அதன்பிறகு 2 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளிவராதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுகுறித்து சூர்யாவும் கவனித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து இனி வரும் காலங்களில் 3 மாதங்கள் முதல் 4 மாதங்களுக்குள் தன்னுடைய படம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் வகையில் அதிக படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். கங்குவா படத்தை தொடர்ந்து, அடுத்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கார்த்தி சுப்பராஜ் இயக்கிய சூர்யா 44 படம் வெளியாக உள்ளது. அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கிய சூர்யா 45 படத்தை, ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கேற்ப படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.





