தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், வரும் 2025ம் ஆண்டில் தனது சினிமா வாழ்வில் 50வது பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் 73 வயதிலும் ஹீரோவாக அசத்திக்கொண்டு வருகிறார்.
அதனால் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி, அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள ஜெயிலர் 2 படங்களை ஒரே ஆண்டில் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அவர் தருகிற பொன்விழா ஆண்டு பரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை கடந்த பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பார்மூலாவை பின்பற்றி வருகிறார். அதாவது பெரிய வெற்றிப் படம் கொடுத்த இயக்குனரை அழைத்து, அவரது இயக்கத்தில் நடிப்பதுதான் அது. அவர்களிடம் தனக்கான ஒரு கதை பண்ணச் சொல்லி அதில் நடிப்பது ரஜினியின் வழக்கமாக இருக்கிறது.
அதனால்தான் துப்பாக்கி படம் இயக்கிய ஏஆர் முருகதாஸ், அட்டக்கத்தி படம் இயக்கிய பா ரஞ்சித், விஸ்வாசம் இயக்கிய சிறுத்தை சிவா, டாக்டர் படம் இயக்கிய நெல்சன், ஜெய்பீம் படம் இயக்கி தசெ ஞானவேல் போன்றவர்களின் படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். இப்போது தி கோட் படம் இயக்கிய வெங்கட் பிரபு இயக்கம் படத்தில் ரஜினி நடிக்க பேச்சுவார்தை நடந்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக நடிகர் விஜய் நடித்த வெற்றிப் படங்களை தந்த இயக்குனர்களை அழைத்து, தன் படங்களை இயக்கச் சொல்வதாக ஒரு தகவல் ஏற்கனவே இருந்து வருகிறது. இது இப்படியிருக்க அவரது மூத்த மருமகன் தனுஷூம் இதே பார்மூலாவுக்கு மாறியிருக்கிறார் என்று இப்போது தகவல் தெரிய வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியை, தயாரிப்பாளர்கள் தாணு மற்றும் மதுரை அன்பு ஆகியோர் ஏற்கனவே புக் செய்து, தங்களது தயாரிப்பில் படத்தை இயக்க கமிட் செய்திருந்தனர். இப்போது மதுரை அன்பு தயாரிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிக்கு விஜய், தனுஷூக்கு சிவகார்த்திகேயனா என, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





