தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். சென்னையில் வங்கியில் பணிபுரிந்த லோகேஷ் கனகராஜ், குறும்படங்கள் எடுத்த அனுபவங்களை கொண்டு நேரடியாக, திரைப்பட இயக்குனராக களம் இறங்கி வெற்றிக் கண்டவர்.
மாநகரம் படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியதை தொடர்ந்து அடுத்து கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்று கொண்டாடப்பட்டார். எல்சியு ( லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்) என்ற முறையில் அவரது அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.
ஆனால் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான லியோ படம் மிகப்பெரிய தோல்வி படமாக விமர்சன ரீதியாக அமைந்தது. ஆனால் வசூல் ரீதியாக 565 கோடி ரூபாய் கடந்து பெரிய லாபத்தை படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு கணிசமான வருமானத்தை கொடுத்தது.
லியோ படம் இடைவேளை வரை ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமான ஒரு படமாக இருந்தது. அதுவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆனால் இடைவேளைக்கு பிறகு பிளாஷ் பேக்கில் லியோதாஸ் விஜய் வருகை, இரட்டை பிறவி, ஜாதக நம்பிக்கை, நரபலி போன்ற விஷயங்களை பார்த்து ரசிகர்கள் அப்படியே மிரண்டு போய்விட்டனர்.
2023ம் ஆண்டில் விஜய் நடித்த ஒரு படத்தில் இப்படியான விஷயங்களும் வருகிறதா, அதுவும் லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு இளம் இயக்குனர் இதுபோன்ற மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களை தனது கதைக்களமாக லியோவில் கொண்டு வரலாமா என்று கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர்.
இப்போது கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் லியோ படம் பற்றி கூறியதாவது, நான் லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை வேறொரு நம்பிக்கையில்தான் வைத்தேன். ஆனால் அது படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது ஒன்றும் பெரிய கிரமை் இல்லையே என்று அவர் கேட்டிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





