மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யாமேனன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் மெர்சல், மாலினி 22 பாளையங்கோட்டை, சைக்கோ, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, இருமுகன், 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருக்கிறார்.
கடந்தாண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யாமேனன், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் காதலியாக அவர் நடித்த இந்த படத்தில் தாய் கிழவி பாடல் டிரண்டிங் ஆனது. மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலும் வைரலானது.
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷூடன் நித்யாமேனன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ராயன் படம் தந்த வெற்றியை தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இட்லி கடை படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்து வருகிறார்.
அத்துடன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் ஒன்றிலும் நித்யாமேனன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். நம்ம வீட்டுப்பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பாண்டிராஜ் படம் என்பதாலும் விஜய் சேதுபதி, நித்யாமேனன் இணைந்து நடிப்பதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது மதுரையில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிகை நித்யாமேனன் எப்போதும் கடுகடுத்த ஒரு முகத்துடன், கோபமாகவே இருக்கிறாராம். யாரிடமும் சகஜமாக இல்லாமல் அவர் கடுகடு என இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு பர்சனல் உதவியாளர்களை அவர்களே நியமித்துக்கொள்வதுதான் வழக்கம். ஆனால் இந்த படத்தில் படத்தை தயாரிக்கும் நிறுவனமே நித்யாமேனனுக்கு உதவியாளர்களை நியமித்துள்ளது. அதனால் ஏற்பட்ட கோபமா என்று தெரியவில்லை. எனினும் ஒரு சிறந்த நடிகை படப்பிடிப்பு தளத்தில் இப்படி கடுகடு முகத்துடன் கோபமாக இருப்பது, கேமரா முன் நின்றாலும் வெளிப்படுமே என்று படக்குழுவினர் பலத்த சங்கடத்தில் உள்ளனர்.





