தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்யும் நடிகராக இருக்கிறார் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் என்ற படம் மூலம் தமிழ் சினிமால் அருள்நிதி அறிமுகமானார். தொடர்ந்து மௌன குரு, ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், தகராறு, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அருள்நிதி நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற படம் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி படம். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி படம், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிமாண்டி காலனி 2 ஆக வெளியானது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து டிமாண்டி காலனி 3, டிமாண்டி காலனி 4 என இதன் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகும் என்றும், அந்த படத்தின் கதைகள் ஸ்கிரிப்ட்டை ஏற்கனவே இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி விட்டார் என்றும் படத்தின் ஹீரோ அருள்நிதி கூறியிருந்தார். எனினும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியை காட்டிலும், நடிப்பில் அதிக ஸ்கோர் செய்தது நடிகை பிரியா பவானி சங்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அருள்நிதி, திமுக குடும்பத்தை சேர்ந்தவர். தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரது குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் அரசியல் வாடை இல்லாமல் பார்த்துக்கொண்டார். இயக்குனர் அவரிடம் கதை சொல்லும்போதே படத்தில் எந்த இடத்திலும் அரசியல் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்வது அருள்நிதியின் வழக்கம்.
இந்நிலையில் கொம்பன், புலிக்குட்டி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிற நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த படத்தில் அரசியல் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அருள்நிதி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் தியேட்டர்களில், ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைகக்கு பிரிமியர் படமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி படம் இதுபோல்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது இந்த படமும் அதே போல் சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.





