ஒரு படத்தை அறிவித்துவிட்டால் அதை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தயாரித்து, இயக்கி, படமாக ரசிகர்கள் முன்னால் காட்ட வேண்டும். இது தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு, நடிகர்களுக்கு ஒரு சவாலான விஷயமாக தான் இருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என மூன்று பேருமே இதில் கூட்டணி அமைத்து ஒத்துழைத்தால் ஒரு படம் விரைவில் உருவாகி வெளிவரும்.
அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதோ அதோ என்று கூறினாலும், இன்னும் படப்பிடிப்பு முடிந்தபாடு இல்லை. அதே போல் விடாமுயற்சியும் அப்படி இப்படி என்று 11 மாதங்களாக இழுத்தடித்து, இப்போது கிளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது.
அதே போல்தான், இப்போது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தும் இன்னும் முடிவுக்கு வராமல், இழுத்துக்கொண்டே போகிறது. இந்த படத்தை முதலில் வருகிற ஆகஸ்ட் 15ல் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்பிறகு டிசம்பர் 6ம் தேதி என்று கூறியிருந்தனர். இப்போது அதுவும் உறுதியில்லை என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
புஷ்பா படம், செம்மரக்கடத்தல் பின்னணியை கதைக்களமாக கொண்டிருந்தது. அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் நடிப்பில் அதகளம் செய்திருந்தார். சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. நாயகி ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியிலும், நடிப்பிலும் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருந்தார். வில்லனாக பகத் பாசில் வேற லெவலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் புஷ்பா படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக கொடுத்த டைரக்டர் சுகுமார், புஷ்பா 2 பாகத்தையும் வேற லெவல் படமாக உருவாக்க திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் தற்போது 60 நாட்கள் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் திருப்தி இல்லை எனவும், அந்த காட்சிகளை மீண்டும் 200 கோடி ரூபாய் செலவில் ரி ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே ஏகப்பட்ட நாட்களை புஷ்பா 2 கால்ஷீட் தந்த அல்லு அர்ஜூன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. வேண்டுமானால் 25 நாட்கள் மட்டும் தருகிறேன் என்று கூற, டைரக்டர் சுகுமாரனுக்கும், அல்லு அர்ஜூனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அல்லு அர்ஜூன் தாடியை டிரிம் செய்து சிங்கப்பூர், ஐரோப்பா என குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டார். பதிலுக்கு டைரக்டர் சுகுமாரனும் அமொிக்காவுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். இப்போது படம் அப்படியே அந்தரத்தில் நிற்பதால் தயாரிப்பாளர் தவிக்கிறார். அதனால் வருகிற ஏப்ரலில்தான் புஷ்பா 2 வர வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.





