தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக தங்களை வெளிப்படுத்தி வருபவர்கள் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா. சுப்ரமணியபுரம் படத்தில் நடிகராகவும் நாடோடிகள் படம் மூலம் இயக்குனராகவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமுத்திரக்கனி. இப்போது ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார்.
அதே போல் பல படங்களில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கியவர் தம்பி ராமையா. துவக்கத்தில் பல படங்களில் நடிகர் வடிவேலுவுடன் அவரது காமெடி குழுவில் ஒருவராக இருந்த தம்பி ராமையா, பிறகு தனியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். காமெடி நடிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்த படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன். இந்த படத்தை இயக்கியவர் நடிகர் தம்பி ராமையா என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கவனத்தை பெற்ற இந்த படம் 23ம் புலிகேசி படம் அளவுக்கு பெரிய வெற்றியை, வரவேற்பை பெறவில்லை.
கொம்பன், அப்பா, கும்கி, சாட்டை, மைனா, உன் சமையலறையில் உள்ளிட்ட பல படங்களில் தம்பி ராமையா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கொம்பன் படத்தில் தம்பி ராமையாவின் கேரக்டர் பெயரே ராஜா கிளிதான். இப்போது அந்த டைட்டிலில் தம்பி ராமையா மகன் உமாபதி ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனியும், தம்பி ராமையாவும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர் பழ.கருப்பையா இளவரசு ஆடுகளம் நரேன் ரேஷ்மா டெப்பா ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
50 வயதை கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி, ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் இந்த படம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 29ம் தேதி ராஜாக்கிளி படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தை இயக்க தம்பி ராமையாக திட்டமிட்ட படப்பிடிப்பு நடத்திய நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் ராஜாகிளி படம் திரைக்கு வருகிறது.





