- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படம் ஏற்படுத்திய பிரச்னை; மன உளைச்சலில் தவிக்கும் கல்லூரி மாணவர் - ரூ. 1.10...

அமரன் படம் ஏற்படுத்திய பிரச்னை; மன உளைச்சலில் தவிக்கும் கல்லூரி மாணவர் – ரூ. 1.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையாக இந்த படம் இருந்தது.

தீபாவளிக்கு அமரன், லக்கி பாஸ்கர், பிரதர், பிளடி பெக்கர் என 4 படங்கள் மட்டுமே வெளியான நிலையில் அமரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் முதலிடம் கிடைத்தது. தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட லக்கி பாஸ்கர் படத்துக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் படங்கள் படுதோல்வி படங்களாக ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தன.

- Advertisement -

இதில் ராணுவ வீரனாக நடித்திருந்த சிவகார்த்திகேயனின் அழுத்தமான நடிப்பும், அவரது மனைவியாக இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்திருந்த சாய்பல்லவியின் நடிப்பும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. அமரன் படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. இப்போது 22 நாட்களில் ரூ. 300 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அமரன் படத்தில் ஒரு காட்சியில், நடிகை சாய்பல்லவியின் மொபைல் எண் காட்டப்பட்டு இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற காட்சியில் பயன்படாத மொபைல் எண் அல்லது உதவி இயக்குனர்கள், படக்குழு சார்ந்த ஒருவரது மொபைல் எண்ணை தான் வழக்கமாக பயன்படுத்துவர். ஆனால் அமரன் படக்குழுவினர், ஏதோ சில எண்களை போட்டு சாய்பல்லவியின் எண்ணாக காட்டியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் உண்மையில் அது சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் என்பவரது மொபைல் எண் என்று கூறப்படுகிறது. அதனால் அமரன் படம் வெளியானது முதல், படம் பார்க்கும் ரசிகர்களில் பலரும் படத்தில் வருவது சாய்பல்லவியின் உண்மையான மொபைல் எண் எனக் கருதி மாணவர் வாகீசனுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் சொல்வதுடன் அடிக்கடி போன் செய்தும் தொல்லை செய்கின்றனர். இதனால் படிக்கவோ, தூங்கவோ, மற்ற வேலைகளில் ஈடுபடவோ அவரால் முடியவில்லை.

இதுகுறித்து படக்குழுவுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் தரப்பில் படத்தில் வரும் அந்த எண்ணை மாற்றவோ, அந்த காட்சியை திருத்தவோ இல்லை. அதனால் அமரன் படக்குழுவால் தனக்கு ஏற்படும் மன உளைச்சலால் ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, மாணவர் வாகீசன் அமரன் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்