நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன், ஊர்வசியை நடிப்பு ராட்சசி என்று செல்லமாக குறிப்பிடுவார். அந்த அளவுக்கு நடிப்பில் எல்லாவிதமான கேரக்டர்களையும் மிக எளிதாக செய்துவிடுவார். இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். முதல் படத்திலேயே, ஹீரோ தன்னை கற்பழித்துவிட்டதாக பொய் கூறி, திருமணம் செய்துக்கொள்ளும் அழுத்தமான ஒரு கேரக்டர். மிக அற்புதமாக நடித்திருப்பார்.
தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், ஆயுதபூஜை, சுயம்வரம், நான் பெத்த மகனே, இரட்டை ரோஜா, வீட்ல விசேஷம், சூரரைப் போற்று என பல படங்களில் ஊர்வசி நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது. இப்போதும் ஊர்வசி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த வீட்ல விசேஷம் படத்தில் ஊர்வசி நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றது. அதாவது, வளர்ந்த 2 பிள்ளைகள் உள்ள நிலையில், 3வதாக ஒரு தாய் கர்ப்பமானால், அந்த குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், பிள்ளைகளுக்கு ஏற்படும் சங்கடங்கள் குறித்து மிக அற்புதமான நடிப்பை தந்திருப்பார் நடிகை ஊர்வசி. பல படங்களில் காமெடி நடிப்பில் அசத்தியிருப்பார் ஊர்வசி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஊர்வசி கூறியதாவது, நான் நடிக்கும் நகைச்சுவை காட்சியில், யார் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். குறிப்பாக உருவக்கேலி என்பதை நான் தீவிரமாக எதிர்க்கிறேன்.
பெரும்பாலும் பல படங்களில், ஹீரோக்களுடன் சுற்றிவரும் சில நபர்கள், இதுபோன்ற காமெடியை தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள், என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார். பல படங்களில் ஹீரோக்களுடன் சுற்றிவரும் நடிகர்களாக கவுண்டமணி, சந்தானம் ஆகிய 2 பேர் மட்டுமே, இதுபோன்ற உருவக்கேலி காமெடியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது காமெடியை ஊர்வசி எதிர்ப்பதாக கூறியிருப்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





