தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய விஜய், ஆகஸ்ட் 22ம் தேதி கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியில் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார்.
இந்த மாநாட்டை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸ் தரப்பில் விதித்த நிலையில், 50 ஆயிரம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டு விட்டனர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாலை 6 மணிக்கு மேடைக்கு வர வேண்டிய விஜய் 2 மணி நேரம் முன்னதாக 4 மணிக்கே மேடைக்கு வந்துவிட்டார்.
தவெக நடத்திய முதல் அரசியல் மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் பேசினார். அவருடைய ஆவேசமான பேச்சை கேட்டு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகளும் அதிர்ந்து போய்விட்டனர். குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகதான் என்னுடைய அரசியல் எதிரி என்பதை பகிரங்கமாக அறிவித்தார் விஜய்.
இப்போது தளபதி 69 படத்தில் நடித்துவரும் விஜய், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தனது கட்சி பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதல்வர் நாற்காலியில் அமரும் லட்சியத்தில் விஜய் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் அரசியல் மாநாடு மிக சிறப்பாக நடைபெற நிலம் கொடுத்து உதவிய விவசாயிகள், மாநாட்டு பந்தல் அமைத்தவர்கள், மாநாட்டு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோருக்கு நேற்று, சென்னை பனையூரில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் விருந்து வழங்கினார்.
இதில் சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், உருளை பட்டாணி பொரியல், செளசௌ கூட்டு, அப்பளம், வடை, பாயாசம், குலோப்ஜாமுன் ஊறுகாய் என சைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. அதே போல் மாநாட்டு பந்தல் பணி செய்தவர்களுக்கு மோதிரம், ஆடைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் வருவல், பிஷ் பிரை என்று அசைவ விருந்து வழங்காமல், தளபதி இப்படி சைவத்துக்கு மாறிட்டாரே என, ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





