இயக்குனர்கள் ஆர் பாண்டியராஜன் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சிலரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் ரமேஷ் கண்ணா. அஜீத்குமார் தேவயானி இணைந்து நடித்த தொடரும் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். மேலும் ஆண்பாவம் முத்து உள்ளிட்ட சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார்.
இயக்குனர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடிகர் கார்த்திக்கின் நண்பராக ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். தொடர்ந்து உன்னை நினைத்து படையப்பா பம்மல் கே சம்பந்தம் பஞ்சதந்திரம் பிரண்ட்ஸ் ஆதவன் நீ வருவாய் என உட்பட ஏராளமான படங்களில் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, நடிகர் விவேக் எனக்கு சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நெருக்கமான நண்பர். அவர்தான் இப்ராகிம் ராவுத்தரிடம் என்னை கதை சொல்ல அழைத்துச் சென்றார். நான் சொன்ன கதை ராவுத்தருக்கு மிகவும் பிடித்து ஓகே சொல்லி விட்டார்.
பொள்ளாச்சியில் எனது குருநாதர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தர்மசக்கரம் படத்தில் கேப்டன் நடித்துக்கொண்டு இருந்தார். அவரிடம் கதை சொல்ல போனேன். அதற்கு அவர், இப்ராகிம் கதை கேட்டால் போதும். அவர் ஓகே சொல்லி விட்டால் போதும். நீ போய் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய் என்றும் கூறிவிட்டார்.
அந்த நேரத்தில் நான் விக்ரமன் சார் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்படியே பல படங்களில் நடிகராக பிக்கப் ஆகி விட்டேன். அப்புறம் அந்த படத்தை எடுக்க என்னால் முடியவில்லை. விஜயகாந்திடமும் போய் கதையை சொல்லவில்லை. இது நடந்தது 2002ம் ஆண்டில். அதற்கு பின் அந்த கதையை மறந்து விட்டேன்.
அதன்பிறகு 2009ம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு கதை கிடைக்காமல் முழித்துக்கொண்டு இருந்தார்கள். கேஎஸ் ரவிக்குமார், சூர்யா படத்துக்கு கதை ஒண்ணும் கிடைக்கலையே என்று வருத்தப்பட்டார். அப்போதுதான் நான் விஜயகாந்துக்கு சொன்ன கதையை சொன்னேன். உடனே அது ஓகே ஆகி விட்டது. சூர்யா நடிப்பில் அந்த படமும் பெரிய ஹிட் ஆனது. அதுதான் ஆதவன் படம் என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.





