நடிகர் ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். ரேடியோ ஜாக்கியாக இருந்த அவர், பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் மாறினார். நான் ஸ்டாப் ஆக அவர் மூச்சுவிடாமல் பேசுவதை ரசிப்பதற்கென்றே தனியாக ரசிகர்கள் வட்டம் உருவானது என்றால் அது மிகையல்ல.
அதன்பிறகு நானும் ரௌடிதான் புகழ் ரன் பேபி தேவி கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோல் செய்த ஆர் ஜே பாலாஜி, அடுத்து எல்கேஜி படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார்.
அந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தின் அபார வெற்றியால் அடுத்து வீட்ல விசேஷம் என்ற படத்தை இயக்கி, ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்திருந்தார். சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால் அடுத்து கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இப்போது நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை இயக்க ஆர்ஜே பாலாஜி தயாராகி வருகிறார். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்க வாசல் என்ற படம் வருகிற 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிறைச்சாலையில் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் நடந்த பயங்க வன்முறை சம்பவங்களை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இது உண்மை சம்பவமாகும். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சொர்க்கவாசல் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்ஜே பாலாஜி பேசுகையில், நான் விருது விழா வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை கலாய்க்கும் விதமான காமெடி ஷோ ஒன்றை செய்தேன். அப்போது சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் எமோஷனலாக பீலிங் செய்து பேசியதை, நான் கேலி செய்து அவரை ஜாலியாக கலாய்த்து விட்டேன். அதை செய்த போது எனக்கு தவறாக தெரியவில்லை. பிறகு நான் அதை டிவியில் பார்த்த போது பெரிய தவறாக தெரிந்தது. அதன்பிறகு உடனடியாக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் என்று கூறினார்.





