இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்கள் ஏதும் கொடுக்காமல், கங்குவா திரைப்படத்தின் மீது கவனம் செலுத்தி வந்தார் நடிகர் சூர்யா. இதற்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்னும் படுதோல்வி திரைப்படத்தை கொடுத்த சிறுத்தை சிவா உடன் சூர்யா இணையும் போதே பலரும் இங்கு முணுமுணுத்தார்கள்.
தனது தவறை ஒத்துக் கொண்டு அடுத்த படத்தில் அதை திருத்திக் கொள்ளும் தன்மை சிறுத்தை சிவாக்கு இல்லை என்றும், அவருடன் ஏன் சூர்யா படம் எடுக்க செல்கிறார் என்றும் அப்போதே சிலர் சமூக வலைதளங்களில் பேசி வந்தார்கள். இது ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்க, சிறுத்தை சிவா சூர்யா தொடர்பான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. யூ வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்தது. விஷ்வல் காட்சிகளுக்காகவும், 3டி தொழில்நுட்பத்திற்காகவும் அதிக மெனக்கெடல்களை படக்குழுவினர் செய்தனர்.
ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் சூர்யா சிறுத்தை சிவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் அதில் இவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பேசினர். இந்தப் படத்தை வாயை பிளந்து பலரும் பார்ப்பார்கள் என்று சூர்யா பேசியிருந்தார். இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய ஞானவேல் ராஜா, ரசிகர்களை நோக்கி இந்த பாஸை அப்படியே வைத்திருங்கள் டிசம்பர் மாதம் வெற்றி விழாவில் பங்கேற்கலாம் என்று டயலாக் விட்டார்.
ஆனால் இவர்கள் கூறியது போல் படம் இல்லை. விசுவல் ரீதியாக பிரம்மாண்டமாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தம் இல்லை என்பதே பெரிய குறைபாடாக இருந்தது. ஆனால், எல்லை மீறி பலரும் கங்குவாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். படத்தின் மீதான விமர்சனத்தை கடந்து தனிப்பட்ட விமர்சனமாக அது மாறியது. இதனால் நடிகை ஜோதிகா பொங்கி எழுந்தார்.
அதேசமயம் இது பிளாக்பஸ்டர் ஹிட் என்றும், அது கோடிகளை குவித்து வருவதாகவும் முதல் இரண்டு நாட்களில் மட்டும் ஞானவேல் ராஜா படத்தின் வசூல் தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டார். அதன்பிறகு சத்தமே இல்லை. தற்போது கங்குவா திரைப்படம் வெளியான 12 நாட்களில், 70 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் கோடி வரை வசூல் ஈட்டுவோம் என்று தயாரிப்பாளர் கூறி வந்த நிலையில் தற்போது, வெளியாகி இருக்கும் இந்த தகவல் சூர்யா ரசிகர்களை தலை சுற்ற வைத்திருக்கிறது.





