நடிகர் பரத் நடித்த எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு ஆகிய படங்களை இயக்கியவர் திருமுருகன். அவர் திரைப்பட இயக்குனராவதற்கு முன்பு மெட்டி ஒலி நாதஸ்வரம் போன்ற டிவி சீரியல்களை இயக்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இந்த 2 சீரியல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
இதில் மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்கிற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட். அதனால் அவர் போஸ் வெங்கட் என்றே அழைக்கப்படுகிறார். டிவி சீரியலில் பிரபலமான அவர் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிவாஜி படத்தில் வில்லன் சுமனின் உதவியாளராக நடித்திருப்பார். கவண் தேவராட்டம் கடல்பூக்கள் சிங்கம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக போஸ் வெங்கட் நடிகர் விஜய் குறித்து கடுமையான தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் துவங்கிய பிறகு, நடிகராக விஜயை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதற்காக அவரை அரசியலில் ஜெயிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது.
நடிகர் விஜய்க்கு நான் உட்பட என் குடும்பத்தில் அனைவருமே ரசிகர்கள்தான். அவரது படம் ரிலீஸானால் முதல் நாள் பார்க்க நானே ஆசைப்படுவேன். ஆனால் அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டு நான் அவருக்கு ஓட்டுப்போட மாட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான். அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் ஜெயித்து தமிழக முதல்வராகி விடலாம் என்கிற விஜயின் கனவு நிச்சயமாக பலிக்காது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் பொதுச் செயலாளர் துரை முருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக தமிழக முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகிகளுக்கு நடிகர் போஸ் வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்தான் இப்போது ஆளுங்கட்சி திமுகவின் பிரதான அரசியல் எதிர்பார்ப்பாளராக பார்க்கப்படுகிறார். அதிமுக பாஜக எதிர்கட்சிகளாக இருந்தாலும் இப்போதைய ஆளுங்கட்சி திமுகவை கடுமையாக நடிகர் விஜய் தனது கட்சி கூட்டங்களில் விமர்சித்து வருகிறார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைப்பதால், பதிலடியாக விஜயை விமர்சிக்கும் நடிகர் போஸ் வெங்கட்டுக்கு முக்கிய பதவி தரப்பட்டுள்ளது.





