மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படத்திலேயே சிக்ஸர் அடித்த அவர் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னேறினார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அவரது பட்டியல் நீளமாக, தற்போது அதில் இணைந்திருக்கிறது கூலி திரைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட அதே நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் என தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து திரைப்படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது.
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்ற போது அதில் அமீர்கானும் பங்கேற்றார். அவர் அந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனை கன்னட நடிகர் உபேந்திராவும் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில்தான், அமீர்கானிடம் ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் கூறி இருப்பதாகவும் அது நடிகருக்கு பிடித்து போய்விட்டதாகவும் தகவல்கள் பரவின.
தற்போது அமீர்கான் நடித்திருக்கும், சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வரும் இருபதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்ற அமீர்கானிடம், லோகேஷ் கனகராஜ் படம் குறித்து கேள்வி எழுப்ப அதனை நடிகர் உறுதி செய்தார்.
அது பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதற்கான சூட்டிங் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவுக்குதான் லோகேஷ் கனகராஜ் இரும்பு கை மாயாவி என்னும் சூப்பர் ஹீரோ கதையை கையில் வைத்திருந்தார். ஒருவேளை அந்த கதைதான் அமீர் கானுக்கு சென்று இருக்குமோ என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





