தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடகராக வலம் வந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் தேனில் விழுந்த பலாச்சுளை போன்று தித்திப்பானவை. கேட்க கேட்க மீண்டும் கேட்க தூணடுபவை. எஸ்பிபி 4 தலைமுறை கண்ட பாடகர் என்றால் அது மிகையல்ல. தன் தேன்மதுர குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 40 ஆயிரத்துகு்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய உன்னத கலைஞன். பாடல்கள் மட்டுமின்றி பல படங்களில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் தெலுங்கில் வெளியான பல படங்களுக்கு பின்னணியில் கமலின் குரலாய் ஒலித்தது எஸ்பி பாலசுப்ரமணியம்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று காலத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார். ஆனால் அதற்கு பின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியது. அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை பாடியிருந்தார்.
சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது. சினிமா துறையிலும் அதன் தாக்கம் உள்ளது. அதனால் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர், பாடகிகள் குரல்களில் புதிய பாடல்களை உருவாக்குகின்றனர். ஆனால் அவை அந்தளவுக்கு ஒரிஜினலாக, தத்ரூபமாக இருப்பதில்லை.
பாடகி பவதாரணி மறைவுக்கு பிறகு, தி கோட் படத்தில் அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா, பவதாரணி குரலில் சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை ஒலிக்க செய்திருந்தார். அதே போல் வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் மனசிலாயோ பாடல் வந்தது. அதேபோல் மறைந்த பாடகர் எஸ்பிபி குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த பலரும் அவரது மகன் எஸ்பிபி சரணிடம் கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், எனது தந்தையின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு பலரும் என்னை தொடர்பு கொள்கின்றனர். நிச்சயமாக அதை அனுமதிக்க முடியாது. சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும், யாராக இருந்தாலும் இதுதான் பதில். ஏஐ தொழில்நுட்பத்தில் அவரது குரலை கேட்க நாங்கள் விரும்பவில்லை. என் தந்தை இறந்துவிட்டார். அவரை விட்டுவிடுங்கள், என்று கூறியிருக்கிறார்.





