தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் கவிஞர் என பன்முக தன்மை கொண்டவர் பார்த்திபன். ஆரம்பத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு புதிய பாதை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ஹீரோவாக இயக்குனராக அவர் அறிமுகமானார்.
இயக்குனர் பார்த்திபன் அவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் புதிய பாதை படம் தான். அதற்கு முன்பு தாவணிக்கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பார்த்திபனை போஸ்ட்மேன் கேரக்டரில் இயக்குனர் கே பாக்யராஜ் நடிக்க வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பாதை படத்தின் கதையை எழுதிவிட்டு பார்த்திபன் தயாரிப்பாளர் தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது சுந்தரம் என்ற பத்திரிக்கையாளர் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார். இந்த படத்தை 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு 38 லட்சம் ரூபாயில் படம் எடுத்து முடிக்கப்பட்டு உள்ளது.
புதிய பாதை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவரை தான் ஹீரோவாக இயக்குனர் பார்த்திபன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டு பிறகு பார்த்திபனே கதாநாயகனாக நடித்தார். மேலும் புதிய பாதை படத்தில் குஷ்பு தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் பார்த்திபன் விரும்பினார்.
குஷ்புவின் வீட்டுக்கு சென்று கதை சொன்னார். புதிய பாதை படத்தின் கதை குஷ்புக்கு மிகவும் பிடித்து போனதால் நடிக்கவும் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து குஷ்புவிடம் பேச சொன்னபோது அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. மேலும் குஷ்புவின் தோற்றமும் வட இந்திய பெண்ணாக இருப்பதால் பிறகு புதிய பாதை படத்தில் குஷ்பு நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பார்த்திபன் நிராகரித்துவிட்டார்.
அதன்பிறகு தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சீதாவை தேர்வு செய்தார். இந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் பார்த்திபனுக்கு சீதா மீது காதல் ஏற்பட்டதால் இந்த படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீதாராமன் என்று மாற்றினார். பின்னர் சீதாவை திருமணமும் செய்து கொண்டார். ஒருவேளை புதிய பாதை படத்தில் ரஜினியும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தால் பார்த்திபன் – சீதா திருமண வாழ்க்கை அமைந்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.





