தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், 2 தினங்களுக்கு முன்புதான் அவருக்கு சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. 20 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவை கோர்ட் உறுதிப்படுத்தியது.
எனினும் குடும்ப வாழ்க்கை சரிவுகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது படங்களில் பணியாற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் தனுஷ். துவக்கத்தில் நடிகராக மட்டுமே இருந்த தனுஷ், பிறகு பாட ஆரம்பித்தார். பின், படங்களை தயாரித்தார். இப்போது இயக்குனராகவும் மாறிவிட்டார்.
அவரது இயக்கத்தில் வெளிவந்த ப பாண்டி, ராயன் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய 2 படங்கள் தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கின்றன. இதற்கிடையே நடிகர் தனுஷ், ஒரு நிகழ்ச்சியில் மனதில் இருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசிய ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் தனுஷ் பேசியதாவது, ஆரம்பத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், என் அண்ணன் செல்வராகவனும் அடிக்கடி வெளியே போவார்கள். அப்போது செல்வராகவன், யுவனிடம் என் தம்பி என்று என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களுடன் என்னையும் அழைத்து செல்வார்கள். அப்போது நான் யுவன் சங்கர் ராஜாவை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது ஹீரோ போன்ற ஸ்டைலிஷான நடவடிக்கைகளை ரசித்துக் கொண்டே இருப்பேன்.
என்னோட ஆரம்பத்துல வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் யுவன் சங்கர் ராஜாதான். அதற்காக நான் அவருக்கு எப்போதுமே கடமைபட்டவனாக இருக்கிறேன். யார் என்றே தெரியாத, முகவரியே இல்லாத 6 இளைஞர்களை, புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் துள்ளுவதோ இளமை.
ஆனால் அந்த படத்தை தனது அபார இசையால் வெற்றி பெற வைத்தவர் யுவன் தான். அவரது இசைதான் அந்த படத்துக்கு அடையாளம் கொடுத்தது.
அவரது இசையால்தான் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால் நாங்கள் நடுத்தெருவில்தான் நின்றிருப்போம். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் அப்போது நாங்கள் இருந்தோம். என் நடிப்புக்கு செல்வராகவன் எப்படி அஸ்திவாரமாக இருந்தாரே, அதே போல் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களுக்கு இசையமைத்து என் வெற்றிக்கு ஆரம்பத்தில் அஸ்திவாரமாக இருந்தது யுவன்தான். அதனால் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்று தனுஷ் பேசியிருக்கிறார்.





