பாய்ஸ் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தவர் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என்ற ஒரு பெயரும் இவருக்கு உண்டு. என்னவோ புடிச்சிருக்கு, தலைநகரம், பட்ஜெட் பத்மநாபன், குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் புவனேஸ்வரி நடித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் விபசார வழக்கில் கைதான அவர் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தமிழை போல தெலுங்கிலும் நிறைய படங்களில் புவனேஸ்வரி நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லி கேரக்டரிலும், கவர்ச்சியான கேரக்டரிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிகை புவனேஸ்வரியை ரசிகர்கள் காண முடியவில்லை. இந்த சூழலில் அவர் தற்போது ஆன்மிக துறவியாக மாறி, கோவில் கோவிலாக சென்று கொண்டிருப்பதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை என உதவிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் முன்பு, மக்களுக்கு அன்னதானம் வழங்கிய புவனேஸவரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தான் என்னுடைய சொந்த ஊர். வறுமை குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு நடிக்க வந்தேன். கவர்ச்சி கேரக்டர்களில் நடித்ததும் இப்படி தான். ஆனால் அந்த கேரக்டர்கள் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை தந்தது. ஒரு கட்டத்தில் நான் தவறானவள் என்ற காலத்தின் பிடியில் எதிர்பாராமல் சிக்கினேன்.ஆனால் நான் நிரபராதி என போராடி நிரூபித்தேன். ஆனாலும் இந்த சமுதாயம் என்னை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதுவே என்னை ஆன்மீகத்துக்கு இழுத்தது. வாழ்க்கை என்பது குறிய கால பயணம். எனவே மீதி காலத்தை இறைபணிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தேன். அந்த வகையில் என் உடலையும் மனதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டேன். முழுமையான மனதுடன் துறவறத்தை ஏற்றுக் கொண்டேன். காசிக்குச் சென்று சித்தியும் பெற்று விட்டேன். நான் செல்லாத கோவிலில் கிடையாது என்கிற அளவுக்கு ஆன்மீக பயணங்கள் செல்கிறேன்.
தினமும் ஏதாவது ஒரு ஆன்மீக தலத்துக்கு சென்று அங்கு மக்களுக்கு உணவளித்து வருகிறேன். அதன்படி தினமும் 300 பேருக்கு சாப்பாடு கொடுக்கிறேன். சென்னையில் என் சொந்தமான வீடுகளை படப்பிடிப்பு, வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் என் தேவைகளுக்கும் அன்னதானத்திற்கும் பயன்படுத்துகிறேன். நான் ஒரு கட்சியிலும் மகளிரணி செயலாளராக இருக்கிறேன். எனக்கு 42 வயதாகிறது. இனி நாள் வாழ்நாள் முழுவதும் இறை பணிக்காகவே செலவிட உள்ளேன் என்று முன்னாள் கவர்ச்சி நடிகை இப்போதைய ஆன்மிக துறவி புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.





