தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் விதார்த். பிறகு பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் சுருளி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் நடிகை அமலாபால் நாயகியாக நடித்திருந்தார். நடிகர் தம்பி ராமையா குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருந்தார்.
மைனா படத்தின் வெற்றிக் பிறகு தொடர்ந்து காற்றின் மொழி, குற்றமே தண்டனை, ஜன்னல் ஓரம், கொடிவீரன், வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விதார்த், ஒரு நல்ல யதார்த்தமான நடிகர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
துவக்கத்தில் கூத்துப்பட்டரையில் கலைஞர்களாக நடிப்பு கற்ற விதார்த்தின் உண்மையான பெயர். அவருடன் இருந்தவர் நடிகர் விமல். அவரது பெயரும் ரமேஷ்தான். விதார்த்தை பெரிய ரமேஷ் என்றும், விமலை மினி ரமேஷ் என்றும் கூத்துப்பட்டறையில் அழைத்துள்ளனர். பிறகு இருவரும் தங்களது பெயரை விதார்த், விமல் என்று மாற்றிக்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விதார்த் தன்னைப் பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து விதார்த் கூறியதாவது, என் தம்பி, அண்ணன் எல்லாம் நன்றாக படித்தார்கள். அதனால் ஆடிட்டர்கள் ஆனார்கள். ஆனால் நான் 10ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்தேன்.
என் அப்பா ஒரு சமையல்காரர். சிங்கப்பூரில் சமையல் வேலை செய்து நிறைய சம்பாதித்தார். அப்படி சம்பாதித்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த காசை எல்லாம் நான் குடித்தே அழித்து விட்டேன். அதைப் பற்றி அவர் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. என்னிடம் அதுபற்றி கேட்டிருந்தால் கூட பரவாயில்லை.
ஆனால் என் மாமாவிடம் சொல்லி என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். காசு போனது கூட பரவாயில்லை. ஆனால் குடிச்சிட்டு வந்து நிக்கறான்னு சொல்லி அழுதார். அதை பார்த்துட்டுதான் இனிமேல் காசு வாங்க கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அன்று என் அப்பா கஷ்டத்தை நான் உணராமல் இருந்திருந்தால், இன்று நடிகனாகி இருக்க முடியாது, என்று விதார்த் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





