சமீபத்தில்தான் ஐஸ்வர்யா – தனுஷ் ஜோடி விவாகரத்து பெற்றது. அடுத்ததாக ஜீவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, இப்போது ஏஆர் ரகுமான் – சாயிராபானு விவாகரத்து வழக்குகள் அடுத்தடுத்து வரிசையில் காத்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்ட்டில் புதியதாக பிரபல இயக்குனர் ஒருவரும் தனது மனைவியை பிரிவதாக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சீனு ராமசாமி. கடந்த 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து விஜய் சேதுபதி முதன்முறையாக நாயகனாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்களை சீனு ராமசாமி இயக்கினார். இந்த படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
கடந்த 2007ம் ஆண்டு தர்ஷனா என்பவரை சீனு ராமசாமி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், தற்போது இவர்கள் தங்களது திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அறிவிப்பை இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு, அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம் என சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இது விவாகரத்து சீசனா என்ற ஆச்சரியாக கேள்வி கேட்கும் அளவுக்கு நாளுக்கு நாள் நிலமை மோசமாகி கொண்டே போகிறது. முன்பெல்லாம் எப்போதாவதுதான் நடிகர், நடிகைகள் விவாகரத்து குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இப்போது மாதந்தோறும் புதுப்பட ரிலீஸ் போல, அடிக்கடி விவாகரத்து தகவல் வெளியாகி வருகிறது. என்ன கொடும சார் இது என ரசிகர்கள் வாய்விட்டே புலம்புகின்றனர்.





