கேரளாவில் மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, அங்கு இந்த விவகாரம் தீப்பற்றி எரிகிறது. சில இயக்குனர்கள், சில நடிகர்கள் மீது நடிகைகள் கூறிய புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ் தெலுங்கு சினிமா துறையிலும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் பெண்களுக்கு இருப்பதால் அங்கும் ஹேமா கமிட்டி போன்ற பெண்களுக்கான பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகைகள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி சமீபத்தில் கூறுகையில், தமிழ் சினிமாவிலும் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதுபற்றி விசாரித்து வருகிறோம். ஆனால் அதை வெளிப்படையாக கூற முடியாது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சுசித்ரா ஏற்கனவே பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாடகி நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, கவிஞர் வைரமுத்துவை பொருத்தவரை பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் மே மாதம் 98 பாடலை பாடியிருக்கிறேன்.
அந்த பாடலை கேட்ட பிறகு எனக்கு போன் செய்து, உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது இப்படித்தான் அவர் வலையில் விழ வைப்பார். அந்த பாடலில் காதல் இருக்கிறது என்றால் அதில் ஆடிய ரீமா சென்னை பார்த்து காதல் வரலாம். என்னிடம் வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார். நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவே என்று எதிர்பார்த்தேன் என வைரமுத்து கூறினார். இல்லை நான் எங்கு போனாலும் பாட்டியுடன் தான் வருவேன் என்றேன்.
என்னுடைய பாட்டி பரிசு தருவதாக சொன்னீர்களே, பரிசு எங்கே என கேட்டார் அவர் வீட்டுக்கு பின்னாடி சென்று அங்கிருந்த இரு ஷாம்பு பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார். அதன் பிறகு அங்கிருந்து வந்து விட்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.




