சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் தி கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி, துல்கர் சல்மானின் மனைவியாக சுமதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தெலுங்கில் உருவான இந்த படம், தமிழிலும் வெளியாகி தமிழ் நாட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
தெலுங்கு படம் என்றாலே அதிரடி சண்டை காட்சிகள், ஆபாச நடனக் காட்சிகள், ஹீரோயிசம் நிறைந்த மசாலா படமாக இருக்கும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி தந்திருந்தார். இவர் தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் படத்தில் சண்டை காட்சிகள், ஆபாச நடனக்காட்சிகள், ஹீரோயிசம் காட்டும் எந்த விதமான மசாலா காட்சிகளும் இல்லை. ஆனால் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து படத்தை பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பான ஒரு படமாக இருந்தது.
இந்த படத்தில் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒரு கேரக்டர் நடிகர் ராம்கி. கடந்த 1980, 90களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இணைந்த கைகள், புலன் விசாரணை, செந்தூரப்பூவே, இரண்டில் ஒன்று போன்ற படங்கள் வெளியான காலகட்டத்தில் தமிழ் சினிமா நடிகர் ராம்கியை கொண்டாடியது. இந்த சூழலில் நடிகர் ராம்கி, லக்கி பாஸ்கர் படத்தில் ஆண்டனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராம்கி கூறியதாவது, சின்ன வயதில் இருந்தே நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. சின்ன பையனாக இருக்கும்போது சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அம்மாவுடன் செல்வேன். அப்போது அங்கே கலர் கலராக சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல அசைவ வகைகள் வைக்கப்பட்டு இருக்கும்.
அதை பார்த்துவிட்டு, ஆசையாக அருகில் அதை தொட போவேன். அப்போதெல்லாம் என் அம்மா என்னை தடுத்து விடுவார். ஒரு உசுரை கொன்று இப்படி செஞ்சு வைச்சிருக்காங்க. இதெல்லாம் சாப்பிட்டால் பாவம் வந்துடும். சாமி கண்ணை குத்தீடும். அதனால் இதை எல்லாம் சாப்பிடக் கூடாது என்பார். அது அப்படியே என் மனதில் தங்கி விட்டதால், இப்போது வரை நான் அசைவம் சாப்பிட்டதே இல்லை. நான் அதை கையால் தொட்டது கூட இல்லை என்று நடிகர் ராம்கி கூறியிருக்கிறார்.





