சினிமா இசைத்துறையில் கொண்டாடப்படும் ஒரு கலைஞராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு, பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1976ம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் தேவராஜ், மோகன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இளையராஜா இதுவரை தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 1200 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7 ஆயிரம் பாடல்களை அவரே சொந்தமாக எழுதியுள்ளார். பல நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார். சமீபத்தில் விடுதலை 2 படத்தில் அவரே எழுதி இசையமைத்து பாடிய தெனம் தெனமும் உன் நெனப்பு என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஆனது.
அன்று முதல் இன்று வரை இசைஞானி இளையராஜாவின் இசையை கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு தனது இசைஞானத்தால், இசையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் இளையராஜா.
தனிப்பட்ட முறையில் அடிக்கடி விமர்சனத்தில், சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்டாலும், இசையில் அவர் ஒரு சகாப்தமாக வாழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. தனிமனித விமர்சனங்களை கடந்து ஒரு இசைக்கலைஞனாக அவர் பெருமைக்குரியவராக இருக்கிறார்.
சமீபகாலமாக வெளியான பல புதிய படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தன்னிடம் அனுமதி பெறாமல் இப்படி தன் இசையால் உருவான பாடல்களை பயன்படுத்துவதால், அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சர்ச்சையை, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், சமீபத்தில் அவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கடந்த மே மாதம், சிம்பொனி இசையை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்து விட்டதாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி குறித்து தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரும் 2025ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் என்னுடைய முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவலையும் அவர் அதில் பகிர்ந்து உள்ளார். இந்த அறிவிப்பு இளையராஜா ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை 2 படம் வருகிற 20ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் தனது சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியிடப் போவதாக இளையராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





