நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் மாதக்கணக்கில் நடந்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கரப்பான் பூச்சிகள் என விமர்சித்துள்ள இந்தி நடிகர் முகேஷ் கண்ணா, அவர்களையும் உடனடியாக சமூகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் முகேஷ் கண்ணா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட உண்மையான மாணவர்களின் போராட்டமாக இது எனக்கு தோன்றவில்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படும் சில அமைப்புகளால் இந்த விஷயத்தில் மாணவர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள். வீடுகளில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை எப்படி நாம் வெளியே தூக்கி வீசி எறிகிறோமோ அதேபோல பொதுவெளியில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தும் இத்தகைய நபர்களையும் சமூகத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று நடிகர் முகேஷ் கண்ணா அந்த வீடியோ பதிவில் பேசியிருக்கிறார்.
மேலும் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் முகேஷ் கண்ணா, அரசியல் சதிகளுக்காக பயன்படும் இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையையும் தொழில் வாய்ப்புகளையும் பாழாக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் நாளை அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் விசா பெறுவதில் கூட பெரிய சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக மாணவர்களில் இந்த போராட்டம் குறித்து பாஜக எம்பியும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரெனாவத் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகரான முகேஷ் கண்ணாவின் இந்த பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் தமிழ்நாட்டில் நீலம் மாணவர்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு கண்டன கூட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித், நீட் தேர்வு பிரச்னை குறித்தும் மாணவர்களின் பிரச்னை குறித்தும் பேசாமல் தவெக ஆட்சி குறித்தும் தவெக அமைச்சரவையில் உள்ள தலித் அமைச்சர்கள் குறித்தும் விமர்சனம் செய்து பேசியது பலத்த சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.





