நடிகர் அஜித் குமாருக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தடைப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் சரிவர சொல்லப்படவில்லை. இந்த சமயத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் கதைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் அஜித் குமார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பெயர் பெற்ற மைத்திரி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.
இது தொடர்பான போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதில் அஜித், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு லுக்கில் ஜாலியான கதாபாத்திரம் போல் போஸ் கொடுத்தார். அப்போதே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தேவி ஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து விலகி இருக்கிறார். இருப்பினும் பாடல்கள் அனைத்தையும் அவர் முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் பின்னணி இசை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஜிவி பிரகாஷ். இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கான சூட்டிங் பணிகளையும் ஆதிக் ரவிச்சந்திரன் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.
ஹைதராபாத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, ஸ்பெயின் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விரிவடைந்தது. இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். பிரசன்னா, அர்ஜுன் தாஸ், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது இறுதிக் கட்டத்தை படக்குழுவினர் நெருங்கி இருக்கிறார்கள். ஒரு பாடல் மற்றும் சண்டைக் காட்சி மட்டும் சூட்டிங் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் படத்திலிருந்து அஜித்தின் தோற்றம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அமர்க்களம் திரைப்படத்தில் வருவது போல் மிக இளமையாக அஜித் காட்சியளிக்கிறார். இந்த திரைப்படத்திற்காக 30 கிலோ எடை குறைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து உற்சாகமடைந்துள்ள அஜித் ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





