தமிழ் சினிமாவை பொருத்த வரை கடந்த சில ஆண்டுகளாக பெரிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளியாகின்றன. ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற நடிகர்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அந்த படங்களில் நடித்தால்தான் 100 கோடி, 200 கோடி ரூபாய் என சம்பளம் வாங்க முடியும்.
அதனால் பான் இந்தியா படங்களாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பிறமொழி படங்களாகவும் அவை உருவாக்கப்படுவதால் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்றமொழிகளில் உள்ள ஸ்டார் நடிகர்களை தமிழ் படங்களில் கேமியோ ரோல்களில் நடிக்க வைக்கின்றனர்.
அப்படி பிறமொழி ஸ்டார் நடிகர்கள், தமிழ் படங்களில் நடித்தால்தான் அந்த மொழிகளில் இந்த படம் வெளியாகும்போது, அங்குள்ள ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களை காண தியேட்டர்களுக்கு வருவார்கள். அதனால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை என மற்ற மாநிலங்களில் வசூலையும் குறிவைத்து படங்கள் உருவாக்கப்படுகின்றன.
இப்படி பிறமொழி நடிகர்களுக்கு தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு தரும்போது தமிழ் சினிமாவில் இதுவரை நடித்து வந்த 2ம் நிலை 3ம் நிலை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள், துணை நடிகர்கள் பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். இப்படி பல ஆண்டுகளாக நடிக்க வாய்ப்பின்றி பல நடிகர், நடிகைகள் வறுமையில் தவிக்கின்றனர்.
அதே நேரத்தில் 2024ம் ஆண்டில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள், பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கணிசமான லாபத்தை அள்ளித் தந்திருக்கின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 140 கோடி வசூலித்துள்ளது.
அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 80 கோடி வசூலித்தது. சூரி நடிப்பில் ரூ. 30 கோடியில் உருவான கருடன் ரூ. 70 கோடி வசூலித்துள்ளது. ரூ. 5 கோடி பட்ஜெட் படம் வாழை, ரூ. 50 கோடி ஈட்டியது. ரூ. 5 கோடியில் உருவான லப்பர் பந்து ரூ. 80 கோடி வசூலித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





