தமிழ் சினிமாவில் பல படங்களில் தன்னை சிறந்த நடிகராக வெளிப்படுத்தியவர் பசுபதி. அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவார். தூள், திருப்பாச்சி, அருள், மதுர, விருமாண்டி போன்ற பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் பசுபதி.
அதே போல் பசுபதி சார்பட்டா பரம்பரை, வெயில் போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். மும்பை எக்ஸ்பிரஸ், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் காமெடி ரோலிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அவரது நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது.
எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஈ படத்தில் ஒரு உரிமைப் போராளியாக பசுபதியின் நடிப்பை, பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். வில்லன் போன்ற தோற்றம் இருந்தாலும், காமெடி நடிப்பிலும் பெயர் வாங்கியவர் பசுபதி என்பதும் கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் கூறுகையில், மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்த்த பிறகு வெயில் படத்தில் பரத்துக்கு அண்ணனாக பசுபதியை நடிக்க வைக்க தீர்மானித்தேன். ஆனால் அதற்கு தயாரிப்பாளராக இருந்த இயக்குனர் ஷங்கர் சம்மதிக்கவில்லை. வில்லன் மகம் கொண்ட அவர், இதுபோன்ற பரிதாபத்துக்குரிய ஒரு ரோலில் செட் ஆவாரா என சந்தேகப்பட்டார்.
அதே நேரத்தில் அவர் பசுபதி கேரக்டரில் சூர்யாவும், பரத் கேரக்டரில் கார்த்தியும் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். பசுபதி கேரக்டரில் நடிக்க சூர்யா மறுத்துவிட்டால் அர்ஜூன், எஸ்ஜே சூர்யா அல்லது சேரன் போன்றவர்களை நடிக்க வைக்கவும் ஷங்கர் ஆர்வமாக இருந்தார்.
ஆனால் நான் இந்த விஷயத்தில் பசுபதி, பரத் இருவரும்தான் வெயில் படத்தில் அண்ணன் தம்பியாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பசுபதி கருப்பு, பரத் சிவப்பு என்ற விமர்சனத்தை உடைக்க அவரது பெற்றோரை கருப்பு, சிவப்பு நிறம் கொண்டவர்களாக காட்டி அந்த பிரச்னையும் தீர்த்து விட்டேன் என்று, இயக்குனர் வசந்தபாலன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





