சொல்லாமலே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் இயக்குனர் சசி. பொதுவாகவே இவரது படங்கள் மென்மையான உணர்வுகளை சொல்லும் படமாகவும் அதே நேரத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த படங்களாகவும் இருந்து வருகின்றன. ஒரு நல்ல படைப்பாளியாக தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட் இயக்குனர் சசி என்றால் அது மிகையல்ல.
சொல்லாமலே படத்தை தொடர்ந்து ரோஜாக்கூட்டம் டிஸ்யூம் பூ பிச்சைக்காரன் சிவப்பு மஞ்சள் பச்சை 100 கோடி வானவில் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இதில் எல்லா படங்களுமே அவரது பெயர் சொன்ன படங்காக இருந்திருக்கின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த படத்தில்தான் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட வேண்டும். அப்போது பணம் பதுக்கல் கருப்பு பணம் போன்ற ஊழல் முறைகேடுகள் ஒழிக்கப்படும் என்று பிச்சைக்காரர் ஒருவர் எப் எம் ரேடியோவுக்கு அழைத்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று மக்கள் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
சில ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே இயக்கும் சசி எந்த படமாக இருந்தாலும் தனது பெயர் சொல்லும் படமாக நல்ல கதைகளை தேர்வு செய்து அதை படமாக இயக்கி வருகிறார். பிச்சைக்காரன் சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கிய படம்தான் 100 கோடி வானவில். இந்த படத்தின் டீசர் 2022ம் ஆண்டிலேயே வெளியான நிலையில், 3 ஆண்டுகளாக இந்த படம் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது.
100 கோடி வானவில் என்ற டைட்டிலே ரசிகர்களை வெகுவாக கவரும் நிலையில் இந்த படம் ஒரு மென்மையான காதல் கதை என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பார்க்கிங் லப்பர் பந்து போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்த நாயகன் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இத்னானி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல பிரச்னைகளால் 3 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் உள்ள 100 கோடி வானவில் படம் விரைவில் திரைக்கு வர ஏற்பாடுகள் இப்போது வெகுவேகமாக நடந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்துக்கு பிறகு சித்தி இத்னானி நடித்த 2வது படம் இதுதான். அதனால் இந்த படம் வெளியானால் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரலாம். அதே போல் வெற்றி படங்களை தந்து வரும் ஹரீஷ் கல்யாணுக்கும் இது மற்றொரு முக்கிய வெற்றிப் படமாக அமையலாம்.





