தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு வைகைப்புயல் வடிவேலு என்ற அடைமொழி பெயரும் உள்ளது. காமெடி நடிப்பில் கடுகளவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமான நடிப்பு கலைஞன் என்பதை யாருமே மறுக்க முடியாது. காமெடி டாக்டர் என்றும் கூட வடிவேலுவை சிலர் புகழ்வது உண்டு.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் வடிவேலு தன் அருமையான காமெடி நடிப்பால் ஒரு காமெடி ராஜ்ஜியமே நடத்திக்காட்டினார் என்றால் மிகையல்ல. ஆனால் திமுகவுக்கு ஆதரவு, கேப்டன் விஜயகாந்த் உடன் மோதல், இயக்குனர் ஷங்கருடன் பிரச்னை என 10 ஆண்டு காலம் சினிமாவில் விட்டு விலகி இருந்தார் நடிகர் வடிவேலு.
இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அவர், தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். கத்தி சண்ட, சிவலிங்கா சந்திரமுகி 2 என வடிவேலுவின் காமெடி நடிப்பு பழையபடி ரசிகர்களிடம் எடுபடவில்லை. அதே நேரத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க மறுக்கும் வடிவேலு, இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சந்தானத்தை சுந்தர் சி நடிக்க வைத்த பிரச்னையில் பல ஆண்டுகளாக சுந்தர் சி படங்களில் நடிக்க மறுத்த வடிவேலு, இந்த படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடிகர் அஜீத்குமார் படங்களில், நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. வடிவேலு தன் படங்களில் நடிக்க நடிகர் அஜீத்குமார் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி கமல் விஜய் தனுஷ் விக்ரம் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த வடிவேலுவை, அஜீத்குமார் 22 ஆண்டுகளாக புறக்கணிக்க முக்கிய காரணம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டில் எழில் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் ராஜா. அஜீத்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் வடிவேலு, அஜீத்குமாருக்கு மாமாவாக நடித்திருந்தார்.
அப்போது படப்பிடிப்பு தளத்தில் அஜீத்குமாரை வாடா போடா என மரியாதையின்றி பேசியிருக்கிறார். பலமுறை அஜீத்குமார் கூறியும் வடிவேலு அதை மாற்றிக்கொள்ளவில்லை. படத்தின் இயக்குனர் எழில் அறிவுறுத்தியும் வடிவேலு அதை கண்டுகொள்ளவில்லை. அவரது இந்த மோசமான நடவடிக்கையால், வடிவேலு இனி எந்த படத்திலும் என்னுடன் நடிக்கக் கூடாது என்ற முக்கிய முடிவை அஜீத்குமார் அப்போதே எடுத்துள்ளார். அது 22 ஆண்டுகளாக தொடர்கிறது.





