அடுத்த ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது அஜித்தின் விடாமுயற்சி. கிட்டத்தட்ட ஓராண்டாகவே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானாலும் சூட்டிங் என்னமோ தொடங்கியது அக்டோபர் மாதத்தில் தான்.
அப்போதே இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்த திட்டமிட்டார் இயக்குனர் மகிழ் திருமேனி. இதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க அங்கேயே விடாமுயற்சி படமாக்கப்பட்டது. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். வில்லன் கதாபாத்திரத்தை மூன்று பேர் எச்சரிக்கிறார்கள். அர்ஜுன் பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் ரெஜினா ஆகியோர் நெகட்டிவ் ரோலில் வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. முதலில் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் அஜித்துக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பிறகு தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு போதிய பணம் இல்லாததால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது.
இப்படி ஏகப்பட்ட தடைகளை கடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது விடாமுயற்சி. அண்மையில் வெளியான இதன் டீசர் பலரும் ரசிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக ஹாலிவுட் அளவுக்கு அதன் மேக்கிங் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். முக்கியமாக, பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் இது என்று பலரும் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படத்திலிருந்து சூட்டிங் பணியின் போது ஒரே ஒரு வீடியோ மட்டும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதில் காரில் மிக வேகமாக அஜித் செல்ல, உடன் ஆரவ் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் விபத்தில் சிக்கியது. இது தொடர்பான காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதுபோன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் வரும் 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சவதீகா எனத் தொடங்கும் இந்த பாடல் வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





