நடிகர் அஜீத்குமார் 2 வேடங்களில் நடித்த வாலி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. இந்த படத்தில் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து விஜய் ஜோதிகா நடித்த குஷி படமும் இயக்குனர் எஸ்ஜே சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து படங்களை டைரக்ட் செய்து அவரே ஹீரோவாகவும் அந்த படங்களில் நடித்தார். பிற இயக்குனர்களின் படங்களிலும் அவர் நடித்தார். பிறகு 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இறைவி படம் மூலம் எஸ்ஜே சூர்யா ரீ என்ட்ரி கொடுத்தார். பிறகு வில்லனாக நடித்து நடிப்பு அரக்கன் என்ற பட்டப் பெயர் பெற்றார்.
இதற்கிடையே கடந்த 2002 – 2003 முதல் 2009 – 2010 வரையிலான 6 நிதியாண்டுகளுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிற்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூறி நடிகர் எஸ் ஜே சூர்யா ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் 2022ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அதே காரணங்களை முன்வைத்து தற்போது மீண்டும் அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த ஆறு வழக்குகளையும் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அவரது மனுக்களை ஏற்க இயலாது என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து ஆறு மனுக்களையும் எஸ் ஜே சூர்யா தரப்பில் திரும்ப பெற்றதை அடுத்து அவற்றை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
6 நிதியாண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான ஆறு வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை நடிகர் எஸ்ஜே சூர்யா திரும்ப பெற்றது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் வில்லனாக நடித்து பல கோடிகள் ரூபாய் சம்பாதிக்கும் நட்சத்திர நடிகர் இப்படி வருமான வரித்தாக்கல் செய்யாமல் இருப்பது சரியா? என்று இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது.





