தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்தி இருக்கிறார். நடிகர் விசு இயக்கிய பெரும்பாலான படங்களில் நடிகர் எஸ்வி சேகரும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக அரசியல் சார்ந்த கருத்துகளை கூறி எஸ்வி சேகர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் எஸ்வி சேகர் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் அளித்த புகாரின்படி அவர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் எஸ்வி சேகர் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்வி சேகர் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், நடிகர் எஸ்வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம் எல் ஏ எம்பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், 6 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட் அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. அபராத தொகையை செலுத்திய பிறகு, தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்வி சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து எஸ்வி சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமீபத்தில் நடிகர் எஸ்வி சேகர், பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டதை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அது இணையத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.





