லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. கடந்த 15 மாதங்களாக ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, பின்பு கடந்த 31ம் தேதி இரவு விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதுவரை இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்கள் மட்டுமே விடாமுயற்சி படத்துடன் பொங்கல் களத்தில் திரைக்கு வருவதாக இருந்தன. ஆனால் இப்போது விடாமுயற்சி வெளியேறியதால் பொங்கலுக்கு வருவதாக 10 படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, ஆகாஷ், அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த படைத்தலைவன், சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி நடித்த மதகஜ ராஜா ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதகஜ ராஜா 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் நடித்த டென் ஹவர்ஸ், கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ்காரன் தருணம் உள்ளிட்ட 8 படங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வணங்கான், கேம் சேஞ்சர் படங்கள் வருகிற 10ம் தேதி ரிலீஸாகிற நிலையில், மற்ற 8 படங்களும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 10 படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1100 தியேட்டர்கள்தான் உள்ளன. இதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட சாதாரண தியேட்டர்களும் அடங்கும். இப்படி ஒரே நேரத்தில் 10 படங்கள் ரிலீஸானால் எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்தமுறை இதே போல் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர், சாப்டர் மிஷன் 1 மற்றும் மேரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியான நிலையில், 80 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட சாப்டர் மிஷன் என்ற சிறந்த படம் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காமல் ரசிகர்களிடம் முழுமையாக சென்று சேரவில்லை. ஆனால் கமர்ஷியல் படங்களான அயலான், கேப்டன்மில்லர் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





