அரசியலில் விஜய் களம் இறங்கிய பிறகு, அவரது கடைசி திரைப்படம் குறித்து ஆவல் எழுந்தது. இதனை முதலில், அட்லி தான் இயக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. பிறகு வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து இணைந்தார் ஹெச் வினோத்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹெச். வினோத், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும் இந்த மூன்று திரைப்படங்களும் அவரது முந்தைய திரைப்படங்களைப் போல இல்லை என்று பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இப்படியான சூழலில் தான், விஜயின் இறுதி படத்தை இயக்கும் அரிய வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். இது அரசியல் சார்ந்த கதைக்களம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அதேசமயம் இது போலீஸ் ஸ்டோரி என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார் வினோத்.
இதில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த மமிதாபைஜூவும் இதில் இடம் பெற்றுள்ளார். பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, பாபி தியோல், நரேன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
அரசியல் பணியோடு நடிப்பையும் கவனித்து வருவதால், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெளியூர்களில் நடத்த வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டாராம். இதனால் சென்னையை அடுத்த பையனூரிலேயே இதன் முழு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 60% திரைப்படத்தை வினோத் முடித்து விட்டதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ஒரு பாடலும் படமாக்கப்பட்டு விட்டது.
கர்நாடகா மற்றும் தெலுங்கு சினிமாவில் பெயர் போன கே வி என் நிறுவனம் தான் இதனை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமான டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை வினோத் கொடுத்திருக்கிறாராம். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கிறார்கள்.





