தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாளைய இயக்குனர் நிகழ்ச்சி இங்கு பலரும் சிகரம் தொடுவதற்கு படிக்கல்லாய் அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதில் குறிப்பிட்ட தக்க ஒருவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அவர் இயக்கிய குறும்படமான பீட்சாவை தான், வெள்ளித் திரையிலும் பெரிய திரைப்படமாக எடுத்தார்.
ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிறகு அவர் தனது சொந்த ஊரான மதுரையை கதைக்களமாக கொண்டு ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்கி அசத்தினார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹா தேசிய விருதையும் பெற்றார். இப்படி முதல் இரண்டு திரைப்படங்களிலேயே பலரது கவனத்தையும் பெற்ற கார்த்திக் சுப்புராஜுக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்தன.
இறைவி மெர்குரி என அவர் இயக்கிய திரைப்படங்கள் வெற்றிக்கு கை கூடாத சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஒரு தீவிர ரஜினி ரசிகன் அவரை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பேட்ட திரைப்படத்தின் மூலம் உறுதிப்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ்.
இப்போது வரையிலும் ரஜினிக்கென தனி விண்டேஜ் காட்சிகள் அந்த திரைப்படத்தில் இருக்கும். இதன் பிறகு அவர் தனுசை வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் தோல்வியடைந்தது. பிறகு விக்ரமை வைத்து அவர் எடுத்த மகான் திரைப்படம், பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொல்லப்போனால் கார்த்திக் சுப்பராஜ்க்கு ஒரு கம் பேக் திரைப்படம் என்று அதனை கூறலாம்.
கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சக்கை போடு போட்டது. எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் தங்கள் பங்குக்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த, திரையரங்குகளில் அந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது. இப்படியான சூழலில் தான் தற்போது சூர்யாவை வைத்து ரெட்ரோ என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
காதல் கலந்த ஆக்சன் படமாக இது உருவாகி இருக்கிறது. அண்மையில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தனது காதலிக்காக அடிதடியை கைவிடும் கதாநாயகனின் கதை தான் இது என்பது டீசரில் பார்க்கும் பொழுது ஓரளவு புரிய முடிந்தது. இப்படியான சூழலில் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த முறை அவர் மீண்டும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை தான் தொடுகிறார். இதில் கதாநாயகன்களாக நடிக்கப் போவது, மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் ஹரீஷ் கல்யாண் என்று கூறுகிறார்கள். இந்த தகவல் மட்டும் உறுதியாக இருந்தால் நிச்சயம் திரையரங்குகளில் பட்டாசு வெடிக்கும் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.





