துணை நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்கள் எல்லாம் தன் படம் பெரிய வெற்றி பெற்றால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துவதுதான் வழக்கம்.
சமீபத்தில் அமரன் படம் தந்த அபார வெற்றியால் தனது சம்பளத்தை ரூ.75 கோடியாக சிவகாா்த்திகேயன் உயர்த்திய நிலையில், கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம் ரூ. 100 கோடி வசூலித்தது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 15 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக குறைத்துக்கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி.
இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், அடுத்து இயக்குனர்கள் பாலாஜி தரணிதரன், எஸ்ஆர் பிரபாகரன் ஆகியோர் இயக்கும் புதிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம், ரசிகர்களிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, யூடியூப்பில் சமூக வலைதளங்களில் தனக்கு பிடித்தமான நடிகர்களுக்காக ரசிகர்கள் சில குழுக்களாக சண்டை போட்டு கொள்கின்றனர். கேவலமாக அடித்துக்கொள்கின்றனர்.
ஒரு நடிகனுக்காக, அவர்களது குடும்பங்களை எல்லாம் கேவலமாக திட்டிக் கொள்கின்றனர். என் ரசிகர்களுக்கு நான் சொல்வது இதுதான். என்னை யாராவது திட்டினால், விமர்சித்தால் அதை கண்டுக்காமல் விட்டுவிட வேண்டும். அவனுடன் சண்டை போட்டு நாறாதீர்கள். அது ரொம்பவும் கேவலமாக இருக்கிறது என்று ரசிகர்களிடம் நேரிலும் பலமுறை கூறி இருக்கிறேன்.
எனக்கு சப்போர்ட் பண்றேன் என்று போயிட்டு அவனவன் குடும்பத்தை திட்டிக்கிறாங்க. பலமுறை இதை நான் சொல்லி இருக்கிறேன். இங்கும் சொல்கிறேன். சினிமாக்காரர்கள் நாங்கள் நன்றாக இருக்கிறோம். வளமாக இருக்கிறோம். எங்களை காப்பாத்தறதாக நினைச்சு, உங்களை உங்க குடும்பங்களை திட்டிக்காதீங்க. தயவு செய்து அதை செய்யாதீங்க, அது வேண்டவே வேண்டாம். பிடிச்ச நடிகரை ரசிச்சிட்டு போயிட்டே இருங்க என்று விஜய் சேதுபதி பகிரங்கமாக பேசியிருக்கிறார்.





