மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த போது சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் நேரடியாக மாநகரம் படத்தில் டைரக்டர் ஆனவர்.
முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. கார்த்தி கமல் விஜய் என முன்னணி ஹீரோக்கள் நடித்த இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனராக மாறினார்.
விஜய் நடிப்பில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படமும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் சாதனை புரிந்த நிலையில் விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. ஏனெனில் இரட்டை பிறவி நரபலி ஜாதகம் என படத்தின் பின்பகுதி காட்சிகள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
லியோ படம் விமர்சன ரீதியாக ஏமாற்றத்தை தந்தாலும், வசூல் ரீதியாக அது வெற்றிப் படமாகவே கருதப்படுகிறது. அந்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். அடுத்த மாதம் பிப்ரவரியுடன் இந்த படத்தின் ஷூட்டிங் முடிய உள்ளது. அதன்பிறகு கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாக 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது, மாஸ்டர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். நன்றி விஜய் அண்ணா. இந்த படத்தை மறக்க முடியாத படமாக்கிய அனைவருக்கும் நன்றி. இந்த மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி என்று அந்த பதிவில் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். மாஸ்டர் படம் வெளியாகி அதற்குள் 4 ஆண்டுகள் ஆகி விட்டதா என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கூறியிருக்கின்றனர்.





