நடிகர் எஸ்வி சேகர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 1980களில் பல படங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் முரளி மோகன் நடித்த படங்களில் எஸ்வி சேகர் நடித்திருக்கிறார். குறிப்பாக விசு இயக்கிய பல படங்களில் நடிகர் எஸ்வி சேகர் நிச்சயமாக ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார்.
குறிப்பாக மணல் கயிறு வேடிக்கை என் வாடிக்கை குடும்பம் ஒரு கதம்பம் திருமதி ஒரு வெகுமதி டௌரி கல்யாணம் சிகாமணி ரமாமணி சிதம்பர ரகசியம் வீடு மனைவி மக்கள் ஊருக்கு உபதேசம் என விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி மேடை நாடகங்களில் அதிக பிரபலமானவர் எஸ்வி சேகர். 1000 மேடைகளுக்கு மேல் நாடகங்ளை நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1980களில் இவரது காமெடி டிராமா கேசட்டுகள் விற்பனை ஜோராக நடக்கும். வீடுகளில் எல்லாம் எஸ்வி சேகர் குரல் ஒலித்தபடி இருக்கும்.
சினிமாவில் டிராமாவில் கொடி கட்டிப் பறந்த எஸ்வி சேகர் ஒரு கட்டத்துக்கு பிறகு, அரசியல் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அதிமுக பாஜக என இருந்த அவர் சமீபகாலமாக அரசியல் விமர்சனங்களை மட்டுமே செய்து வருகிறார். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, கடந்த 2007ம் ஆண்டில் என் மகன் நடித்த ஒரு படம் வெளியானது. அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிவகார்த்திகேயனிடம் கேட்டிருந்தோம். அப்போது அவர் நடிகராக சினிமாவில் அறிமுகமாகவில்லை.
அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது நடிகர் கமல்ஹாசனுடன் நான் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் உதவ முடியுமா, என்று கேட்டார். அப்படி கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று கமல்ஹாசன் தயாரித்த அமரன் படத்திலேயே கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதுதான் வளர்ச்சி என்று எஸ்வி சேகர் பாராட்டி இருக்கிறார்.





