தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணிக்கு வரும் சில நடிகர்கள், பிறகு தொடர்ந்து தோல்வி படங்களை தருகின்றனர். மன ஆறுதலுக்காவது இடையிடையே ஒரு வெற்றிப் படம் கிடைக்குமா என எதிர்பார்த்தால் அதற்கு பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
அந்த வரிசையில் நடிகர்கள் விஷால் சூர்யா ஜெயம் ரவி அதர்வா பரத் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த 12 படங்களில் ஜெய்பீம் சூரரைப் போற்று என ஓடிடியில் வெளியான 2 படங்கள் மட்டுமே வெற்றியை தந்தது. ஜெயம் ரவியும் கோமாளிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை தரவில்லை.
தற்போது வெளியாகி உள்ள அவரது காதலிக்க நேரமில்லை படமும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரிய வரவேற்புக்கு உரிய படமாக தெரியவில்லை. அதே போல் பாணா காத்தாடி பரதேசி ஈட்டி 100 போன்ற படங்களில் நடித்த அதர்வாவும் பல ஆண்டுகளாக பட வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்.
அதே போன்று நடிகர் விஷால், சண்டக்கோழி திமிரு துப்பறிவாளன் போன்ற நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவரது படங்களும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா பங்களிப்பால் மார்க் ஆண்டனி மட்டுமே விஷாலுக்கு பெரிய வெற்றியை தந்தது.
இந்த சூழலில் 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் உருவான விஷால் படம் மதகஜ ராஜா இப்போது பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்து விட்டது. இதில் சொந்தக் குரலில் விஷால் மை டியர் லவ்வரு என்ற பாடலை, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், மதகஜ ராஜா படத்தில் நான் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனி நடத்தும் இசைக் கச்சேரியில் அந்த பாடலை மேடையில் பாட என்னை அழைத்திருக்கிறார். இதுதான் நான் பாடப்போகும் முதல் இசைக் கச்சேரி. இந்த வாய்ப்பு கனவிலும் நான் நினைக்காத ஒன்று. ஆனால் ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என்று நம்புகிறேன், என்று பேசியிருக்கிறார்.





