நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவை சேர்ந்தவர். 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தனது 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறார். ஆனால் இந்த படத்தில் நடிக்கும் முன்பே அவர் சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆச்சாரியா பாடசாலை (ஏபிஎஸ்) பள்ளி மற்றும் கல்லூரியின் 90வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த பள்ளியில்தான் நடிகர் ரஜினிகாந்த் படித்துள்ளார். அதனால் நடிகர் ரஜினிகாந்த் அந்த ஆச்சாரியா பாடசாலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் படித்த பள்ளி ஆண்டு விழாவிற்கு வீடியோ பதிவு மூலம் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் எனது உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது. எனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கன்னட வழி வகுப்பில் படிக்கும் போது நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். நான் 98 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் என் அண்ணன் என்னை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்தார்.
கன்னட மொழி பள்ளியில் இருந்து ஆங்கில மொழி பள்ளிக்கு மாறிய போது படிப்பில் பல சிரமங்களை சந்தித்தேன். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எனது சிரமத்தை புரிந்து கொண்டு பாடம் நடத்தினார்கள். 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றேன். சில காரணங்களால் கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை.
பள்ளியில் படித்த நாட்களில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு வகுப்பில் பலவிதமான கதைகளை சொல்வேன். நான் பார்த்த படங்களை நண்பர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டுவது என்னுடைய வழக்கம். இது எங்கள் ஆசிரியர்களுக்கும் தெரியும். அதை கவனித்து ஆசிரியர்கள் போட்டிகளில் குறிப்பாக நாடகத்தில் நான் பங்கேற்க ஊக்கமளித்தனர்.
பள்ளியில் ஏற்பாடு சாண்டாலா என்ற நாடகத்தில் முதல்முறையாக நடித்தேன். அதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த நாடகத்துக்கு பரிசு கிடைத்தது. கேடயத்தை வென்றோம். எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது என்னால் முடிந்தவரை குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரிதான். நான் அங்கு கழித்த நாட்கள், விளையாடிய விளையாட்டுகளை எல்லாம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





