சதுரங்க வேட்டை நேர்கொண்ட பார்வை தீரன் அதிகாரம் 1 வலிமை துணிவு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் எச் வினோத். துணிவு படத்துக்கு பிறகு கமல்ஹாசன் படத்தை இயக்க ஓராண்டுக்கு மேல் காத்திருந்த நிலையில், கமல் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் அவரது 69வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச் வினோத்துக்கு கிடைத்தது. இப்போது ஜனநாயகன் என்ற அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. ஏப்ரல் மாதம் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
கடந்த 26ம் தேதி படத்தின் டைட்டில் ஜனநாயகன் என்றும் அதே நாளில் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்களையும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் வெளியிட்டது. முதல் படத்தில் பின்னணியில் மக்கள் கூட்டம் திரண்டிருக்க விஜய் செல்பி எடுப்பது போலவும், 2வது படத்தில் விஜய் சவுக்கை சுழற்றுவது போலவும் போஸ்டர்கள் வெளியாகின.
இந்த படத்துக்கு நாளைய தீர்ப்பு என்றுதான் முதலில் பெயர் வைக்கப்படுவதாக இருந்துள்ளது. விஜயின் முதல் படத்தின் தலைப்பே கடைசி படத்தின் தலைப்பாகவும் இருந்திருக்கும். ஆனால் ஏற்கனவே தலைப்பு விஷயம் கசிந்து விட்டதால், கடைசி நேரத்தில் ஜனநாயகன் என டைட்டிலை மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தீரன் அதிகாரம் 1. கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படத்தில், வெளிமாநில லாரிகளில் வரும் கொள்ளையர்கள், வயதான தம்பதியர் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் கதையை கொண்டது. மாஸ் வெற்றி பெற்ற படம் இது.
ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்த பிறகு, இயக்குனர் எச் வினோத், தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும் பச்சைக்கொடி காட்டி விட்டது. கைதி 2 படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பிலும் கார்த்தி கலந்துக்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.





