மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தவர் ஷோபனா. தமிழில் தளபதி இது நம்ம ஆளு பொன்மனச் செல்வன் மல்லுவேட்டி மைனர் பாட்டுக்கு ஒரு தலைவன் சிவா வாத்தியார் வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பிறமொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், முறைப்படி நாட்டியம் கற்றவர். நடிகை ஷோபனா பரதநாட்டிய பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். நடிக்கும் ஆர்வம் இருந்தாலும் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டதால் நாட்டிய பயிற்சி பள்ளியில் நாட்டியத்தில் பல மாணவிகளை உருவாக்கி வருகிறார்.
மலையாளத்தில் ஷோபனா மோகன்லால் சுரேஷ் கோபி நடித்த மணிச்சித்ரதாழ் என்ற படம்தான், தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் உருவானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் கேரக்டரில் ரஜினியும் சுரேஷ் கோபி கேரக்டரில் பிரபுவும் நடித்திருந்தனர். ஷோபனா கேரக்டரில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார்.
நடிப்பில் எந்தவிதமான கேரக்டர் என்றாலும் ஷோபனா மிக சிறப்பான நடிப்பை தருபவர். குறிப்பாக இது நம்ம ஆளு படத்தில் அக்ரஹாரத்து பெண்ணாக ஷோபனா நடிப்பு மிக அழுத்தமாக இருக்கும். நாயகன் பாக்யராஜை அடாவடியாக காதலித்து திருமணம் செய்துக்கொள்வார்.
சமீபத்தில் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. அதில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் அஜீத்குமாருக்கும் நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் ஷோபனாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதை அப்போதைய ஜனாதிபதி ஏபிஜெ அப்துல் கலாம் வழங்கினார்.
தற்போது 54 வயதான நிலையிலும் நடிகை ஷோபனா திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். இதுகுறித்து நடிகை ஷோபனா கூறுகையில், திருமணம் செய்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. திருமணத்தில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. இப்படியே இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.





