குழந்தை நட்சத்திரத்தில் தொடங்கி தற்போது வரை நாயக பின்பத்தில் இருக்கும் நடிகர்கள் இங்கு சில பேர் தான். கமல்ஹாசன் உட்பட ஒன்று இரண்டு பேரே இருக்கும் இந்த பட்டியலில் முக்கியமான நபர்தான் சிலம்பரசன். தனது தந்தை டி ராஜேந்தரின் படங்களில் சிறுபிள்ளையாக நடித்து, வசனங்களில் தெறிக்கவிட்ட சிலம்பரசன் இளைஞரான பிறகு கதாநாயகனாக நடித்து கலக்கினார்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏராளமான வெற்றிகளை கொடுத்திருக்கும் அவர் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை உள்பட ஏராளமான குற்றச்சாட்டுகளை சிக்கிய சிலம்பரசன், தற்போது அதையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது மாநாடு திரைப்படத்தில் என்று அடித்துக் கூறலாம். கொரோனா சமயத்தில் திரையரங்குகளுக்கு செல்ல மக்கள் தயங்கி வந்த வேளையில் அதை அனைத்தையும் உடைத்து விட்டு அனைவரையும் தியேட்டருக்கு படையெடுக்க வைத்த திரைப்படம் தான் மாநாடு.
சிலம்பரசன் கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அது. வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். டைம் லுக் கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மிகவும் சிக்கலான இந்த கதையை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார் வெங்கட் பிரபு.
மாநாடு திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு மற்றொரு காரணம் எஸ் ஜே சூர்யா தான். தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் நடித்த அவர், தான் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் விசில் பறக்கச் செய்தார். அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் படத்தை மிகப்பெரிய அளவில் ரீச் அடைய செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு வெற்றி திரைப்படத்தையும் சிலம்பரசன் கொடுத்திருந்தார்.
தற்போது, சிலம்பரசன் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர், ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து உடன் இணைய இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று திரைப்படமும் சிம்புவின் பட்டியலில் உள்ளது. அவரது பிறந்த நாள் வரும் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநாடு திரைப்படம், நாளை முதல் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.





