இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களால் அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த அனுராக் காஷ்யப்பை மறக்கவே முடியாது. இந்தியில் முன்னணி இயக்குனராக நடிகராக உள்ள அவர், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருப்பார்.
அதிலும் அந்த படத்தில் அவரது கணீர் என்ற அந்த குரலை கேட்டு எப்படி ஒரு கம்பீரமான குரல் என்று ரசிகர்கள் வியந்து போயினர். ஆனால் அனுராக் காஷ்யப் குரல் அதுவல்ல, அவருக்கு பின்னணி குரலாக ஒலித்தது இயக்குனர் மகிழ் திருமேனியின் குரல்தான் என்பது பலருக்கும் தெரியாது. இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் பேசியவர் இயக்குனர் மகிழ் திருமேனி தான்.
இயக்குனர்கள் கௌதம் மேனன் செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக ஆரம்பத்தில் பணி செய்தவர். பிறகு முன்தினம் பார்த்தேனே தடையற தாக்க மீகாமன் தடம் ஆகிய படங்களை இயக்கினார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இயக்கத்தில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் கலகத் தலைவன். இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார்.
இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வரும் 6ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மீது அதிக பற்றும் காதலும் கொண்டுள்ள மகிழ் திருமேனி, தன்னுடைய பெயர் வேறு என்றும் தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை மகிழ் திருமேனி என மாற்றிக்கொண்டதாகவும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஆனால் அவரது உண்மையான பெயரை சொல்ல மறுத்து விட்டார்.
மேலும் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் நான் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்திருப்பேன். தமிழ் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறேன். அரசியலில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. தமிழில் நாவல் எழுதும் ஒரு ஆசையும் எனக்கு உள்ளது என்று அந்த நேர்காணலில் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, தமிழ் மீது பற்றுள்ளவராக சொல்லும் இயக்குனர் மகிழ் திருமேனி அஜர்பைஜான் மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பில் தமிழ் மொழி பேசும் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. சென்னையில் இருந்து விடாமுயற்சி படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள், தமிழர்கள் யாரும் இல்லை, இதுதான் அவரது தமிழ்பற்று என்று விமர்சித்திருக்கிறார்.





