தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன். இவரை எஸ்டிஆர் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே பெயர் வாங்கியவர். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் 1 வயது முதல் அவரது தந்தை டிஆர் என அழைக்கப்படும் டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக என் தங்கை கல்யாணி படத்தில் சிம்பு நடிப்பு வேற லெவலில் இருந்தது.
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிம்புவுக்கு மாநாடு படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்த காடு படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன் பின் வந்த பத்துதல படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாளில் அவரது நடிப்பில் உருவாக உள்ள 3 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் 49வது படத்தில் நடிக்கிறார். அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் 50வது படத்தை நடிகர் சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார்.
ஹரீஷ் கல்யாண் இந்துஜா எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பார்க்கிங். இந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்பு 49 படத்தில், சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். வருகிற ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என கூறப்படும் நிலையில், விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன், சிம்பு நடிப்பில் உருவாகும் அவரது 49வது படமும் பொங்கலுக்கு நேரடியாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





