இப்போது ரஜினி நடிப்பில் கூலி 2 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜூனா சத்யராஜ் உபேந்திரா அமீர்கான் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளது.
சென்னை ஐதராபாத் விசாகபட்டணம் தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பலகட்டங்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் பெரிய வெற்றியை பெற்றதால், அதே சென்டிமென்ட்டில் இந்த கூலி படத்தையும் வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்க உள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் 57 நாட்கள் இரவுகளில் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்த படத்தில் பாடல் காட்சி கிடையாது. கதாநாயகியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கைதி 2 படத்தை அடுத்த 2 ஆண்டுகளில் இயக்க திட்டமிட்ட நிலையில் விக்ரம் மாஸ்டர் லியோ கூலி என அடுத்தடுத்த படங்கள் கமிட் ஆனதால் கைதி 2 படப்பிடிப்பு நீண்ட நாட்கள் தள்ளிப் போய்விட்டது. இப்போது கூலி படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் என்பது திட்டவட்டமாகி விட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகலாம்.
இந்நிலையில் கைதி 2 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி விட்டார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் நடித்திருக்கிறார். விக்ரம் 2 படம், கமல் லோகேஷ் கூட்டணியில் எதிர்காலத்தில் உருவாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் நடித்த லியோ படத்தில் எல்சியு காட்சியாக கமலின் குரல் மட்டுமே ஒலிக்கும்படி லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார். அதே போல் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தில் எல்யுசி காட்சியில் கேமியோ ரோலில் கமலை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து கமலிடம் லோகேஷ் பேசிய போது, உடனே ஓகே சொன்ன கமல், டேட் மட்டும் சொல்லுங்க வந்துவிடுகிறேன் என்றும் உறுதி தந்திருக்கிறார்.




